அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கியமான பாக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் அமெரிக்காவுக்கு ஒப்படைக்காவிட்டால், “மோசமான விஷயங்கள் நடக்கும்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டதைக் தொடர்ந்து, இது தலிபான்கள் பக்கம் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதோடு, ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல் சூழ்நிலைக்குள் நுழையக்கூடிய அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் 2021ஆம் ஆண்டு வெளியேறியபின் தலிபான்கள் பாக்ராம் தளத்தை கைப்பற்றியிருந்தனர். தற்போது அந்த தளத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் அமெரிக்கா கைப்பற்ற முயல்கிறது என்பது தான் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், டிரம்ப் ஊடகங்களிடம் பேசியபோது, ஆப்கானிஸ்தானுடன் இதுகுறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகு தலிபான்கள், அமெரிக்காவின் கோரிக்கையை நேரடியாக நிராகரித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கூறுவதாவது, பாக்ராம் தளத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சி என்பது ஒரு நேரடி படையெடுப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என்றும், அதற்குத் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களும் ராணுவ வீரர்களும் பெரிதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் போர் சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், டிரம்பின் இந்த நெருக்கடியான நடவடிக்கை தெற்காசிய பிராந்தியத்திலும் அமைதி அச்சுறுத்தப்படுவதற்கான தடயமாகும்.
