அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள H-1B வீசா கட்டண உயர்வு, உலகளவில் வேலைவாய்ப்புக்காக அமெரிக்காவை தேடி செல்லும் பணியாளர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் H-1B வீசா கட்டணம் USD 100,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அமீர்கா விமானம் ஒன்றில் பயணம் செய்த இந்தியர் உட்பட பலர் பதற்றமடைந்து விமானத்திலிருந்து இறங்கி வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பை வீடியோவில் பதிவு செய்த பயணிகள், “H1B வீசா வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு முழு குழப்பமாக மாறிவிட்டது. டிரம்ப் எடுத்துள்ள திடீர் முடிவால், பலரும் விமானத்தில் இருந்து இறங்க விரும்பினர். அதனால் நாங்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக விமானம் திரும்பப் புறப்படாமல் நிறுத்தப்பட்டோம்,” எனக் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்ததாகவும், புதியதோடு பழைய H-1B வீசா வைத்திருப்பவர்களும் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துர்கா பூஜையை முன்னிட்டு இந்தியா திரும்பும் பயணிகள் எண்ணிக்கையும் திடீரென அதிகரித்திருப்பதால், டெல்லி-நியூயார்க் ஒருவழி விமான டிக்கெட் விலை ரூ.37,000-இல் இருந்து ரூ.80,000 வரை உயர்ந்துள்ளது. இந்திய அரசு இந்த வீசா கட்டண உயர்வால் ஏற்படும் விளைவுகளை குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும், முழுமையான விளைவுகள் குறித்து ஆய்வு நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
