அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமி கடற்கரையில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 83 வயது முதியவர் ஒருவர் மேலாளர் பெண்ணை பலமுறை கத்தியால் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பெண் ரெபக்கா டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் சொத்து மேலாளராக பணியாற்றிய அமெலியா சோலா ஆர்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஜான் குலா, தற்போது கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை 11 மணியளவில்  நடந்துள்ளது. குடியிருப்பின் 10வது மாடியில் குலாவும், அவரது காதலி ரோசிண்டா அரேல்லானாவும் மற்றும் மேலாளர் ஆர்டிஸும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

 

 

வாக்குவாதத்தின் போது, குலா  திடீரென கத்தியை எடுத்து, அந்தப் பெண்ணின் மார்பிலும் தலையிலும் பலமுறை குத்தினார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  இந்த முதியவரை தடுத்து நிறுத்தி கத்தியை கீழே வீசியெறிந்தும், குலா பின்னர் மற்றொரு கத்தியுடன் மீண்டும் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரின் காதலி இடையில்வந்து அதனைத் தடுத்துள்ளார்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, குலா அவரது காதலியின் குடியிருப்பிற்குள் மறைந்திருந்ததாகவும், போலீசார் அவரை அங்கிருந்து கைது செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தற்போது புளோரிடாவின் டோரலில் உள்ள மெட்ரோவெஸ்ட் தடுப்பு மையத்தில் ஜாமீன் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் கண்காணிப்பு காட்சி மற்றும் தாக்குதலுக்குப் பிறகு ஏற்படும் இரத்தக்கறை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பான அடுத்த நீதிமன்ற விசாரணை நவம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.