கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன், இரு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உணவில் விஷம் வைத்துக் கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு இடையே, பல்வேறு நபர்களுடன் தகாத உறவில் இருந்த சைத்ரா, இது குறித்துக் கணவர் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்துள்ளார்.

குறிப்பாக, தனது கள்ளக்காதலன் ஷிவு என்பவருடன் இணைந்து, குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக உணவு மற்றும் காபியில் வீரியம் மிக்க தூக்க மாத்திரைகளையும் நச்சுப் பொருட்களையும் கலந்து கொடுத்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் தொடர் உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

​மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கணவர் கஜேந்திரா, சைத்ராவின் கைப்பையில் இருந்த மாத்திரைகளை மருத்துவரிடம் காண்பித்தபோது, அவை மூளைச் சாவுக்கு வழிவகுக்கும் ஆபத்தான மருந்துகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது உடலிலும் நச்சுத் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைத்ரா கைது செய்யப்பட்டார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜாலி ஜோசப்பின் ‘சயனைடு’ கொலை வழக்கை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.