ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்குக் கப்பல்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான காத்திருப்பு காலம் நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் சிலிண்டர் பதுக்கலையும் கள்ளச்சந்தை விற்பனையையும் தடுக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை மே 1 முதல் 100% அமல்படுத்த உள்ளது. இதன்படி, சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் 4 இலக்க ‘டெலிவரி ஆதென்டிகேஷன்’ (DAC) குறியீட்டை பகிர்ந்தால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். இதோடு சர்வதேச சந்தை நிலவரத்தால் மே 1-ம் தேதி சிலிண்டர் விலை அதிரடியாக உயருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. சிலிண்டர் திருட்டைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஓடிபி முறை இனி இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.
