மருத்துவர்களால் ‘மூளைச் சாவு’ (Brain Dead) அடைந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு, உடல் உறுப்புகளை தானமாகப் பெற அறுவை சிகிச்சை தொடங்கவிருந்த நிலையில், நபர் ஒருவர் கண் விழித்து அழுத சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் படக் காட்சிகளையே மிஞ்சும் இந்த நிஜச் சம்பவம் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.
கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த அந்தோணி தாமஸ் ‘டிஜே’ ஹூவர் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது குடும்பத்தினரும் மிகுந்த மனவருத்தத்துடன், தாமஸின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
அறுவை சிகிச்சை அரங்கில் (Operation Theatre), தாமஸின் உறுப்புகளை எடுப்பதற்கான பணிகள் தொடங்கின. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் கண்ட காட்சி அவர்களை உறைய வைத்தது. மயக்க நிலையில் இருந்ததாகக் கூறப்பட்ட தாமஸ், திடீரென கட்டிலில் அங்கும் இங்கும் நகரத் தொடங்கினார். மிகவும் கொடூரமான விஷயமாக, அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததை ஊழியர் நடாஷா மில்லர் கவனித்துள்ளார்.
இது குறித்து தாமஸின் சகோதரி டோனா கூறுகையில், “அவரை ஐசியூ-விலிருந்து அழைத்துச் செல்லும்போதே அவர் கண்கள் திறந்திருப்பதை நான் கவனித்தேன். ஆனால், அது வெறும் உடல் அசைவு தான் என்று கூறி மருத்துவர்கள் அதனை அலட்சியப்படுத்தினர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தாமஸ் அசைந்ததைக் கண்டவுடன் அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர் தனது மேலதிகாரியைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அங்கிருந்து வந்த பதில்தான் உச்சக்கட்ட அதிர்ச்சி. “அறுவை சிகிச்சையைத் தொடர வேறு மருத்துவரைத் தேடுங்கள்” என மேலதிகாரி கூறியதாகத் தெரிகிறது. மேலும், தாமஸ் விழித்தவுடன் அவரை மீண்டும் மயக்கமடையச் செய்து அறுவை சிகிச்சையைத் தொடர அதிகாரிகள் முயன்றதாகவும், இதன் காரணமாக ஆத்திரமடைந்த பல ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவத் துறையின் இவ்வளவு பெரிய அலட்சியத்திற்கு மத்தியிலும், இயற்கையின் அதிசயத்தால் அந்தோணி தாமஸ் இன்று நலமுடன் உயிர் பிழைத்துள்ளார். இந்தச் சம்பவம் அமெரிக்க மருத்துவ உலகில் ‘மூளைச் சாவு’ குறித்த வரையறைகள் மற்றும் உறுப்பு தான நடைமுறைகள் மீது மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
மேலும் உயிருடன் இருப்பவரை ‘இறந்துவிட்டார்’ என அறிவித்து உறுப்புகளை எடுக்க முயன்றது, மருத்துவ வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகப் பார்க்கப்படுகிறது.
