அர்ஜென்டினாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான கேண்டெலா ரெய்பாட், 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். சிறுவயதிலிருந்தே மூக்கின் ஒரு பக்கத்தில் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், இது ஒரு நாள்பட்ட சைனஸ் பிரச்சனை என்று அவர் நம்பியிருந்தார். ஜாகிங் முதல் இரவில் தூங்குவது வரை அவருக்குச் சிரமம் இருந்துள்ளது.
கடந்த ஆண்டு, தாங்க முடியாத சைனசிடிஸ் வலி காரணமாக அவர் மருத்துவரை அணுகியபோது, சி.டி ஸ்கேன் மூலம் அவரது மூக்கின் உள்ளே ஏதோ ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் ஒரு மணி நேரம் முயற்சி செய்து அந்தப் பொருளை அகற்றினர். அகற்றப்பட்டதைக் கண்டு மருத்துவர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர்.
அவர் மூக்கின் உள்ளே 35 வருடங்களாக ஒரு மடிந்த டேப் துண்டு சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் அவரது சுவாசத்தைத் தடுத்து வந்தது. 1990 ஆம் ஆண்டில் சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவர்கள் அவரது மூக்கில் ஒரு குழாயைச் செருகியபோது, இந்த டேப் துண்டு தவறுதலாக உள்ளே விடப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். டேப் அகற்றப்பட்ட பிறகு, கேண்டெலா மிகவும் நிம்மதியடைந்துள்ளார்.
“35 ஆண்டுகளுக்குப் பிறகு என் மூக்கு திறந்திருப்பது போல் உணர்கிறேன், என்னால் சுதந்திரமாக சுவாசிக்க முடிகிறது,” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த விசித்திரமான மருத்துவ சம்பவம் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
