சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக வெற்றிச் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சென்னை தரமணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட ரணம் ஆறுவதற்குள்ளாகவே, தலைநகரின் மையப்பகுதியில் உள்ள நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்திலேயே 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குத் தோல்வியடைந்துள்ளது என்பதற்குச் சான்றாகும்.
“விடியல் தருகிறோம்” எனக் கூறி ஆட்சியில் அமர்ந்த திமுகவின் நிர்வாகத்தில், கல்வி பயிலும் புனிதமான வளாகங்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லாதது வேதனைக்குரியது. அரசு நிறுவனங்களின் மூக்கிற்கு அடியிலேயே இத்தகைய குற்றங்கள் துணிச்சலாக நடத்தப்படுவது, குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதோ அல்லது காவல்துறையின் மீதோ எவ்வித அச்சமும் இல்லை என்பதையே காட்டுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காக வெற்று விளம்பரங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்த அரசு, களத்தில் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது. அரசு கல்லூரிகளில் முறையான கண்காணிப்பு கேமராக்களோ அல்லது தகுந்த பாதுகாப்பு ஊழியர்களோ இல்லாதது இந்த நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை அம்பலப்படுத்துகிறது.
தமிழக முதல்வர் அவர்களே! அறிவாலயத்து அதிகாரம் என்ன செய்கிறது? உங்கள் ஆட்சிச் சக்கரம் யாருக்காகச் சுழல்கிறது? வாக்குக்கு ஒரு நீதி, வாழ்க்கைக்கு ஒரு நீதியா? இத்தகைய மெத்தனமான ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் 24 மணி நேரப் பாதுகாப்பை உடனடியாகப் பலப்படுத்த வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
