திமுகவிடம் காங்கிரஸ் கெஞ்சுவதாக விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, “காலில் விழுவதற்குப் பெயர் என்ன?” என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி – ராகுல் காந்தி சந்திப்பைக் குறித்து, திமுகவிடம் காங்கிரஸ் கெஞ்சுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இரு கட்சித் தலைவர்கள் அல்லது தலைமையில் இருப்பவர்கள் சந்தித்துப் பேசுவது ‘கெஞ்சுவது’ என்றால், கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி செய்ததைப் போலக் காலில் விழுவதற்குப் பெயர் என்ன என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் ஒரு விவாதப் பொருளாகப் பேசப்பட்டதைப் பத்திரிகைகள் வாயிலாகப் பார்த்தேன். இது போன்ற விவகாரங்களில் இரு கட்சித் தலைமைகளும் கலந்து பேசி உரிய முடிவை எடுப்பார்கள். எனவே, இது குறித்து யாரும் வீணாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
தமிழக வெற்றிச் கழகத் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தால் நன்றாக இருக்கும் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தனது ஆசையைச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
