ஐஐடி பாம்பே வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்து, மகாராஷ்டிராவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய அவர்,
“கடவுளுக்கு நன்றி, ஐஐடி பாம்பே இன்னும் அதே பெயரால் உள்ளது. அதை ‘ஐஐடி மும்பை’ என்று மாற்றவில்லை. அதேபோல், ஐஐடி மெட்ராஸ் அதன் பெயரை மாற்றவில்லை; அது இன்னும் ஐஐடி மெட்ராஸ் தான்,” என்று கூறினார்.

இந்தப் பேச்சு மீது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக எதிர்வினைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “இப்போதுதான் அந்தக் கட்சியின் உண்மையான மனநிலை வெளிப்பட்டுள்ளது. மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்கத் திட்டமிடுகிறார்கள்.” “மும்பை மராத்தியர்களுக்குச் சொந்தமானது. மராத்தியர்களிடம் அது என்றும் இருக்கும்.”

“ஜிதேந்திர சிங்குக்கு மும்பையுடன் எந்தத் தொடர்பும் இல்லை. எப்படியாவது உயர் மட்ட கைதட்டலைப் பெறும் நோக்கத்தில்தான் இந்தக் கூற்று.” “மும்பை என்ற பெயரை அவர்கள் வெறுக்கிறார்கள்; அது மும்பாதேவி பெயரை தாங்குவதால்தான்.” மேலும், பஞ்சாபில் சண்டிகர் நகரத்தைப் பிடிக்க முயன்ற முயற்சி மக்கள் எதிர்ப்பால் தோல்வியடைந்ததையும் குறிப்பிட்ட அவர், “அதேபோல் மும்பையையும் குஜராத்துடன் இணைக்க முயற்சி நடைபெறுகிறது. இது மராத்தியர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்,” என்று எச்சரித்தார்.

மேலும் ராஜ் தாக்கரேவின் இந்தக் கடுமையான பதில், மாநில அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.