கோவையில் ஒரு பெண் தனது நிறுவனத்திலிருந்து விலகி தனியாகத் தொழில் தொடங்கியதால், ஆத்திரமடைந்த முன்னாள் நிறுவன உரிமையாளர் அந்தப் பெண்ணுக்குப் பழிவாங்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை அனுப்பித் தொல்லை கொடுத்துள்ளார்.
கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணின் பெயருடன் ஆபாசமான சொற்களை இணைத்து, தினமும் 50 முதல் 100 பார்சல்கள் வரை அவரது வீட்டு முகவரிக்கு வருமாறு செய்துள்ளார். இதனால் ஒரே நேரத்தில் பல கூரியர் ஊழியர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டதாலும், வீட்டு வாசலில் வந்து நின்றதாலும் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 8 மாத காலத் தேடலுக்குப் பிறகு, இந்தப் புகாரில் தொடர்புடைய முன்னாள் நிறுவன உரிமையாளரைத் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் விலகியதால் தனது தொழில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
