சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாகக் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறும் இந்த முக்கிய மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கூடச் செய்யாமல் திமுக அரசு மெத்தனமாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைகள் குறித்துத் தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்தும், அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என்றும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விளம்பர நோக்கத்தோடு மட்டுமே செயல்படுவதால் ஏழை எளிய மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுத்தமான குடிநீர், போதுமான மருந்துகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரமான சூழல் இருப்பதை திமுக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.