விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமாரும் முக்கியப் பங்காற்றிய நிலையில், தற்போது அக்கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சமீபத்தில் திமுகவில் இணைந்த பி.டி.செல்வகுமார், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் பரிந்துரையின் பேரில் இயக்கத்திற்குள் வந்தவர் என்றும், அவர் தற்போது தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும் செல்வகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தவெகவில் மூத்த நிர்வாகிகள் இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்துக்கும், கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே மோதல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு புறம் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கட்சியில் இணைவது விஜய்க்கு பலம் சேர்த்தாலும், மறுபுறம் பி.டி.செல்வகுமார் போன்ற நம்பிக்கைக்குரியவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விமர்சனம் செய்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
