கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் காந்திகஞ்ச் பகுதியில், ஏழு வயது சிறுமி வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம், முதலில் விபத்தாகவே கருதப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் விசாரணையின்போது, இது கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
காந்திகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சித்தாந்தின் மகள் ஜானவி (7) கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி வீட்டின் மூன்றாவது மாடியில் விளையாடியபோது வீழ்ந்து பலியாகினார்.இந்தச் சம்பவத்தை சித்தாந்த், “கால் தவறி விழுந்துவிட்டாள்” என போலீசாருக்கு தெரிவித்தார். இதன்பேரில் காந்திகஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஜானவி, சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை ஆவார். ஜானவியின் தாய் கடந்த 2023-ல் மரணமடைந்த பின்னர், சித்தாந்த் தனது இரண்டாவது மனைவியாக ராதாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சிறுமி மரணத்திற்கு பிறகு, பக்கத்து வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது, அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பதிவாகியிருந்தன.
ஜானவி மூன்றாவது மாடியில் விழும் தருணத்தில், ராதா அருகில் நிற்பது தெளிவாக காணப்பட்டது. மேலும், ஒரு இருக்கையை நகர்த்தி, அதன்மீது ஜானவியை ஏறவைத்து, கீழே விழ வைத்தது வீடியோவில் காண முடிந்தது.
இக்காட்சிகள், பக்கத்து வீட்டை சேர்ந்தவரால் சித்தாந்திடம் பகிரப்பட்டதாகவும், அதன்பின் போலீசாருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, காந்திகஞ்ச் போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி, ராதாவை கைது செய்துள்ளனர். மேலும் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், ராதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
