அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரூர் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும், அதை குற்றத்தை ஏற்கும் வகையில் பார்க்க முடியாது” என்று கூறினார்.
“விஜய்யை கைது செய்வது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மிகுந்த நிதானத்துடன் செயல்படுகிறார். அவர் அனுபவமிக்க தலைவராக உள்ளார். விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், அது மற்ற கட்சிகளுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “நியாயமான விஷயங்களை பேசினால், உடனே முதல்வருக்கு ஆதரவாக செயல்படுகிறாரென்று விமர்சிக்கிறார்கள். கரூர் சம்பவத்தை இழுபறியாக்கி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெகாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார். உயிரிழப்பு போன்ற கடுமையான சூழ்நிலையில், இப்படி கூட்டணி பேச்சுகள் நடத்தப்படுவது நரித்தனமாக இருக்கிறது” எனக் கண்டித்தார்.
“தவெகவைக் கூட்டணிக்குள் அழைத்துவர ஆளுங்கட்சி மீதே பழி சுமத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். ஆனால், கரூர் சம்பவம் ஒரு விபத்தே. இதில் யாரையும் நேரடியாக குற்றம் சாட்ட முடியாது” என்றார்.
2026 தேர்தலை நோக்கி அமமுக திட்டமிட்டு செயல்படுவதாகவும், “அந்த தேர்தலில் பழனிசாமியின் துரோக அரசியலை வீழ்த்துவோம். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தவிர, குமாரசாமி, குப்புசாமி, யார் வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று அவர் தெரிவித்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பழனிச்சாமியை வீழ்த்துவது மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம் என்று கூறினார்..
