தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அதிமுகவின் ‘கொறடா’ அதிகாரம் மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்டம் குறித்த முக்கிய சட்ட விளக்கங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) எம்.பி ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒரு கட்சியின் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் அந்தந்தக் கட்சியின் தலைமைக்கே (எடப்பாடி பழனிசாமி) உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஒரு பக்கம் இருந்தாலும், கட்சியின் தலைமை நியமிக்கும் கொறடாவே சட்டப்படி செல்லுபடியாகும்.
கட்சித் தலைமை நியமிக்கும் கொறடா பிறப்பிக்கும் உத்தரவானது, அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். இந்த உத்தரவை மீறிச் செயல்படும் அல்லது வாக்களிக்கும் எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சட்டப்படி வழிவகை உள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்து ரவிக்குமார் சில தார்மீகக் கேள்விகளையும் முன்வைத்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் யாராவது ஆளுங்கட்சி அமைச்சரவையில் சேர விரும்பினால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலைச் சந்திப்பதே அரசியல் அறம். அதைவிடுத்து கட்சித் தாவலில் ஈடுபடுபவர்களை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பார்களா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் முன்வைக்கும் ‘தூய்மையான அரசியலுக்கு’ இத்தகைய கட்சித் தாவல்கள் மற்றும் குதிரை பேரங்கள் உகந்ததாக இருக்குமா? இது அவர் முன்னிறுத்தும் சித்தாந்தத்திற்கு முரணானது அல்லவா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அதிமுகவில் நிலவி வரும் அதிகாரப் போட்டி மற்றும் ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய அரசியல் நகர்வுகளுக்கு இடையே, ரவிக்குமார் எம்.பி அளித்துள்ள இந்தச் சட்ட ரீதியான விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
