தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, “முதலமைச்சர் விஜய் வீட்டுக்கு முகமூடி அணிந்து கொண்டு வந்த நபர் யார்?” என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குதிரை பேரம் நடக்கவில்லை என்பதை முதல்வர் விஜய்  நிரூபிக்க வேண்டும். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள், தவெக அரசுக்கு எவ்வாறு நிபந்தனையற்ற ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார்களோ, அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டுமே, அங்கு “குதிரை பேரம்” எதுவும் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் இல்லத்திற்குச் சமீபத்தில் ஒருவர் தனது முகத்தை மூடிக்கொண்டு சென்றதாகக் கூறப்படும் விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ள பிரேமலதா, முதலமைச்சர் வீட்டுக்கு முகத்தை மூடிக்கொண்டு வந்த அந்த நபர் யார்? என்ற விவரத்தை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் ரீதியாகத் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்துப் பொதுவெளியில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மறைமுகமான செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக மற்றும் அதிமுக இடையே நிலவி வரும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், பிரேமலதா விஜயகாந்தின் இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.