திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நகர்வுகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. “தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துச் சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்பி, மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்பட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துகள்” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்தபடி, பெண்களுக்கான ‘மகளிர் உரிமைத் தொகை’யை உயர்த்தி வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. “கடந்த திமுக ஆட்சியில் அறிவித்த உரிமைத் தொகையை, தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ரூ.2,500-ஆக உயர்த்தி, இன்று (15-ம் தேதி) முதல் அனைவரது வங்கிக் கணக்கிலும் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனச் செயற்குழு வலியுறுத்தியது. மேலும், 6 சிலிண்டர்கள் மற்றும் இலவச பஸ் பயணம் போன்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கூட்டத்தின் முக்கிய அம்சமாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே போட்டியிட வேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் திருவெறும்பூர், மணப்பாறை மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் வாக்களித்த மக்களுக்குச் செயற்குழு தனது நன்றியினைப் பதிவு செய்தது. மேலும் திருச்சி கிழக்கில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சகாயம் ஐஏஎஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த தொகுதியில் போட்டியிட்டால் கண்டிப்பாக இடைத்தேர்தலில் விறுவிறுப்புக்காக பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.