உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் கோமதிநகரில் உள்ள பத்திரகர்புரம் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், ஏற்பட்ட சிறிய சண்டை பரபரப்பாக மாறியது. ஒரு பெண், தனது வாகனத்திற்கு தான் முதலில் பெட்ரோல் போட வேண்டும் என கூறி, வரிசையில் இருந்த ஆண்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தனது கையில் செருப்பை தூக்கி காட்டி மிரட்டிய காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெண்மணி, “நான் வரிசையில் முன்னே வந்தேன், எனவே எனது வாகனத்திற்கே முதலில் பெட்ரோல் நிரப்பவேண்டும்” என்று வாதிட்டார். அதை எதிர்த்து நின்ற ஒருவர், “நீங்கள் இவ்வளவு  நேரம் எங்கே இருந்தீர்கள்?” என்று கேட்க, பெண் அவரது பைக்கை தள்ளி விட்டு, தவறான வார்த்தைகளால் திட்டினார்.

மேலும், அந்த நபருடன் வந்த மற்றொருவர் போலீசாரை அழைக்கப்போவதாகக் கூறியதும், அவர் கைபேசியை பிடித்து இழுக்க முயற்சித்தார்.

இந்த மோதல் நடக்கும் போது, பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர்களோ, மற்ற வாடிக்கையாளர்களோ தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.