ஈரான் மற்றும் ரஷ்யா இடையிலான ஆயுத விநியோகப் பாதையை இலக்கு வைத்து காஸ்பியன் கடலில் இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஈரானில் உள்ள ‘பந்தர் அஞ்சலி’ துறைமுகத்தின் மீது இஸ்ரேலிய வான்படை நடத்திய இந்தத் தாக்குதல், அந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட மிக முக்கியமான மற்றும் முதல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
மேலும் உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்குத் தேவையான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளை விநியோகிக்கும் முக்கிய மையமாக இந்தத் துறைமுகம் விளங்கிய நிலையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் அந்த விநியோகச் சங்கிலியைத் தகர்த்துள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலின் மூலம் இஸ்ரேல் தனது தாக்குதல் எல்லையை பாரசீக வளைகுடாவையும் தாண்டி விரிவுபடுத்தியுள்ளதைக் காட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் இராணுவக் கூட்டணியை முடக்குவதே இஸ்ரேலின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.
இத்தாக்குதலால் ஈரானிய கடற்படை உள்கட்டமைப்புகள் மற்றும் போர்க்கப்பல்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சர்வதேச அளவில் எரிசக்தி விலையேற்றம் மற்றும் வர்த்தகப் பாதைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்து வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
