மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்புத் தொட்டியைக் குறிவைத்து ஈரான் இன்று ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் எரிபொருள் தொட்டி தீப்பற்றி எரியத் தொடங்கியதை அடுத்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
மேலும் குவைத் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், விமான நிலையத்தின் ஒரு பகுதி சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கிடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை ஈரான் தொடர்ந்து இலக்கு வைத்து வருகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து குவைத் ராணுவம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் வான் எல்லைக்குள் நுழையும் அத்துமீறிய ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இத்தகைய மோதல்களால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது
