ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக, அதன் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் சுமார் ₹3,100 கோடி அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நியூ மெக்ஸிகோவின் சாண்டா பே நீதிமன்றத்தில் கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்ற இந்த விசாரணையில், மெட்டா நிறுவனம் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, சிறார்களைப் பாலியல் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கத் தவறியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.

இந்நிலையில் முன்னாள் ஊழியர்கள் மற்றும் பல சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில், மெட்டாவின் செயலிகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தங்கள் தளங்களில் தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்குவதற்குத் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருவதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அரசுத் தரப்பில் 2.2 பில்லியன் டாலர் வரை அபராதம் கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் தற்போது விதித்துள்ள 3,100 கோடி ரூபாய் அபராதம், சமூக வலைதள நிறுவனங்கள் பயனர்களின், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.