சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘ஐக்யூ ஏர்’ நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத் தர அறிக்கையின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் 3-வது இடத்திலும், 2024-ஆம் ஆண்டில் 5-வது இடத்திலும் இருந்த இந்தியா, தற்போது ஒரு படி முன்னேறினாலும், நாட்டின் காற்றின் தரம் இன்னும் அபாயகரமான அளவிலேயே உள்ளது.
இது குறிப்பாக, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான அளவை விட இந்தியாவின் சராசரி காற்று மாசுபாடு சுமார் 10 மடங்கு அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் இப்பட்டியலில் முதலிடத்திலும், வங்கதேசம் மற்றும் தஜிகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் லோனி நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காசியாபாத் அருகே அமைந்துள்ள இந்த நகரில் காற்றில் கலந்துள்ள நுண்துகள்களின் அளவு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை விட 22 மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. டெல்லி இப்பட்டியலில் உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராகத் தொடர்ந்து 8-வது முறையாக நீடிக்கிறது.
இந்நிலையில் வாகனப் புகை, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை எரிப்பது போன்ற காரணங்களால் வட இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் திருநெல்வேலி இந்தியாவின் தூய்மையான நகரங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
