மத்திய காசாவின் அல்-மகாரி (Al-Maghazi) அகதிகள் முகாம் அருகே, இஸ்ரேலிய ராணுவத்தினர் ஒரு வயது குழந்தையைச் சித்திரவதை செய்துள்ளதாக வெளியான தகவல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. ஒசாமா அபு நாசர் என்பவர் தனது 18 மாதக் குழந்தை கரீமுடன் பொருட்கள் வாங்கச் சென்றபோது, இஸ்ரேலிய ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்திய ராணுவத்தினர், அவரிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக அவர் கண் முன்னாலேயே பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளனர்.
குழந்தையின் காலில் சிகரெட் சூடு வைக்கப்பட்டும், ஆணியால் குத்தப்பட்டும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், குழந்தையின் தந்தை இன்னும் இஸ்ரேல் ராணுவத்தின் பிடியிலேயே உள்ளார்.
2025 அக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பின்னரும், காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தத் தாக்குதல்களில் 677 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த இந்த அவலநிலை, சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தந்தையை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் சர்வதேச அமைப்புகளுக்குக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
