சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக் நாயக் மற்றும் மாதுரி விஸ்வகர்மா ஆகிய இருவரும் உருகி உருகி காதலித்து, பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள். சொந்த ஊரில் பிழைப்பு நடத்த வழியில்லாமல், வயிற்றுப் பசிக்காகவும், பிறக்கப்போகும் குழந்தைக்காகவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள களிமேடு பகுதிக்கு வந்தனர்.

மேலும் அங்குள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் தங்கி, பட்டுக்கூடு சேகரிக்கும் தொழிலாளர்களாக இரவு பகலாக வியர்வை சிந்தி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், மாதுரி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததால், திலக் நாயக் தன் மனைவியை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்துள்ளார்.

இதனால் சம்பவத்தன்று மதியம், ஆசையாக வாங்கி வந்த மீனை மாதுரி சமைத்து கணவருக்குப் பரிமாறியுள்ளார். ஆனால், உணவை வாயில் வைத்த திலக் நாயக், “மீன் குழம்பு ஏன் இவ்வளவு கேவலமாக, ருசி இல்லாமல் இருக்கிறது?” எனக் கூறி மாதுரியைக் கடுமையாக வசைபாடியுள்ளார்.

பின்னர், கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் கோபத்தில் கத்திய வார்த்தைகள் மாதுரியின் இதயத்தைக் கிழித்துள்ளது. கணவன் கோபமாக வெளியேறியதும், வீட்டில் தனியாக இருந்த மாதுரி, கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அந்த கணப்பொழுதில் ஏற்பட்ட தீவிர மன உளைச்சலால், தனது துப்பட்டாவைக் கொண்டு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இரவு வேலை முடிந்து ஆசையோடு வீட்டிற்குத் திரும்பிய திலக் நாயக், கதவைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். தன் உயிரினும் மேலான காதலியும், வயிற்றுக்குள் வளர்ந்த தன் வாரிசும் பிணமாகத் தொங்குவதைக் கண்டு கதறித் துடித்தார்.

இச்சம்பவம் குறித்து வேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாதுரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சாதாரண மீன் குழம்புப் பிரச்சினை, இரண்டு உயிர்களைப் பறித்து, ஒரு குடும்பத்தையே சுடுகடாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.