ஆந்திர மாநிலம் டாடா நகரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி சென்ற சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
டாடா – எர்ணாகுளம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்: 18189) ரயில் நேற்று மாலை புறப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 12.45 மணியளவில் எலமஞ்சிலி அருகே சென்றுகொண்டிருந்தபோது, ரயிலின் ஏசி பெட்டிகளில் ஒன்றில் திடீரென கரும்புகை பரவியது.
அந்த நேரத்தில் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததால் புகை பரவியதை உடனடியாக யாரும் கவனிக்கவில்லை. சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து விழித்துப் பார்த்த போது, பெட்டி முழுவதும் புகை மண்டலமாக மாறியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே, பெட்டி முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
தீ விபத்தை கண்ட பயணிகள் அலறியடித்த நிலையில், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ரயிலின் B2 மற்றும் M1 எனும் இரண்டு ஏசி பெட்டிகள் முழுமையாக கருகி சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் பெட்டிகளுக்குள் சென்று பயணிகளை மீட்டனர். ஆனால், சந்திரசேகரன் சுந்தரம் என்ற பயணி ஒருவர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டது.
தீ விபத்துக்குள்ளான இரண்டு பெட்டிகள் ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணங்களை கண்டறிய தெற்கு ரயில்வே சார்பில் இரண்டு தடயவியல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
உதவி தொடர்பு எண்கள்:
எலமஞ்சிலி: 7815909386
அனகபள்ளி: 7569305669
டூனி: 7815909479
சாமல்கோட்: 7382629990
ராஜமுந்திரி: 088-32420541, 088-32420543
எளூரு: 7569305268
விஜயவாடா: 0866-2575167
