தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்னும் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று திடீரென முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சித் திட்டங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று கூறிய அவர், அதற்காகவே முதல்வரைச் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் கூறி அதிர வைத்துள்ளார். ஓபிஎஸ்-ஸின் இந்தத் திடீர் மனமாற்றமும், திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடும் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பே ஓபிஎஸ் ‘ரூட்’ மாறிவிட்டாரா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
