திமுக அமைச்சர் கே.என்.நேரு மீதான 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில், அமலாக்கத் துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய் அதிரடியான கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அரசு வெறும் விளம்பரங்களுக்காக மட்டுமே இயங்கும் “வெற்று மாடல்” என்றும், ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அமைச்சர்களைப் பாதுகாப்பதிலேயே திமுக குறியாக இருக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார். அமலாக்கத் துறை ஏற்கனவே ஆதாரங்களை அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்திய திமுக அரசின் உச்சியைப் பிடித்து நீதிமன்றம் தற்போது உலுக்கியுள்ளதாக விஜய் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு…
— TVK Vijay (@TVKVijayHQ) February 20, 2026
மேலும், டாஸ்மாக்கில் 1,000 கோடி, நகராட்சித் துறையில் 1,020 கோடி என திமுக அரசின் ஊழல்கள் அனைத்தும் ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே புரளுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், ஊழல் கறையோடு இருக்கும் அமைச்சர் நேருவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தில்லுமுல்லுகளையும், தகிடுதத்தங்களையும் செய்து வரும் திமுக அரசைத் தூக்கி எறிய மக்கள் விசிலடித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தனது அறிக்கையில் விஜய் மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
