திருவண்ணாமலை அருணாச்சலார் கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ‘இடுக்கு பிள்ளையார்’ கோயில் அருகே உள்ள ‘மோட்ச மார்க்கம்’ என்ற குறுகிய பாறைப் பாதையில், பெண் பக்தர் ஒருவர் சிக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் பாறைகளுக்கு இடையே நகர முடியாமல் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட நிலையில், அங்கிருந்த பக்தர்கள் அவரைப் போராடிப் பாதுகாப்பாக வெளியே மீட்டனர்.
முன்னதாக, ஜூலை 24 அன்று ஆந்திராவைச் சேர்ந்த 36 வயதான மணிகுமார் என்ற பக்தர், இதே குறுகலான பாறைப் பாதையைக் கடக்க முயன்றபோது உள்ளேயே சிக்கிக்கொண்டார். தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்துதான், சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த காணொளி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
அருணாச்சல மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்த இடுக்கு பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது. இங்குள்ள பாறைப் பிளவின் வழியாக உடலை நெளித்துச் சென்று கடப்பது, ஆன்மீக ரீதியாகத் தடைகளை நீக்கி ‘மோட்சம்’ (பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை) தரும் என்று பக்தர்கள் பலரால் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
ஆனால், இத்தகைய குறுகிய பாதையைக் கடப்பதால் மோட்சம் கிடைக்கும் என்று எந்தவொரு புனித மத நூல்களிலோ அல்லது ஆன்மீகக் கோட்பாடுகளிலோ குறிப்பிடப்படவில்லை என்றும், இது வெறும் உள்ளூர் நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அறிவியலற்ற இத்தகைய ஆபத்தான நம்பிக்கைகளால் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன.
A few days ago, Manikumar (36) from Rajamahendravaram, Andhra Pradesh, got trapped in the narrow rock passage known as Moksha Margam (Moksha road) on the southern path of Arunachala Giri in Tiruvannamalai. He suffered severe breathing problems and later died. Now, just days… pic.twitter.com/jTQkn7EcJ9 — Aparajite (@amshilparaghu) July 28, 2026 “>
எனவே, இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க கோயில் நிர்வாகமும் அரசும் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எச்சரிக்கைப் பலகைகள் வைப்பது, குறுகிய பாதையில் செல்ல முடியாதவர்களைத் தடுப்பது மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியாளர்களை நியமிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
