காதல் தோல்வியடைந்தால் அந்த உறவை மறந்துவிட வேண்டும் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால், உலகின் ஒரு பகுதியில் காதல் பிரிந்தாலும் அந்த நினைவுகளை மதிக்கும் வித்தியாசமான பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சிறப்பு சந்திப்பில், முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்து தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த பாரம்பரியத்தின் பின்னணியில் ஒரு பழமையான காதல் கதை இருப்பதாகக் கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இளைஞரும் இளம்பெண்ணும் காதலித்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு சமூகத் தடைகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இறுதியில் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து தங்களது காதலை நினைவுகூர இருவரும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்திப்பே காலப்போக்கில் ஒரு பாரம்பரியமாக மாறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வு தற்போது ‘காவ் வாய் காதல் சந்தை’ என்ற பெயரில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கலாசார விழாவாக வளர்ந்துள்ளது. திருமணமானவர்களும் தங்களது முன்னாள் காதலர்களை சந்தித்து பேசுவது அங்குள்ள சமூகத்தில் இயல்பாகவே பார்க்கப்படுகிறது. கணவன் அல்லது மனைவியிடம் இருந்து இதை மறைத்து செய்வதல்ல என்பதும் இந்த பாரம்பரியத்தின் தனிச்சிறப்பாகக் கூறப்படுகிறது.
காதல் சந்திப்புடன் மட்டும் இந்த விழா முடிவதில்லை. பாரம்பரிய இசை, நடனம், நாட்டுப்புற விளையாட்டுகள், உள்ளூர் உணவுகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பல ஆண்டுகளாக தொடரும் இந்த மரபு, கடந்த கால உறவுகளை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் கலாசாரத்தையும் பாதுகாக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
