சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளியை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். சாலையில் அழுதுகொண்டே ஒரு பெண் தன்னை ஆன்மிகவாதி ஒருவன் ஏமாற்றிவிட்டதாகக் கதறியபோது, சுற்றியிருந்தவர்களோ அந்த ஆசாமியைக் கும்பிட வரிசையில் நின்ற அவலத்தை உலகம் பார்த்தது. அதே போன்றதொரு அதிர்ச்சிகரமான மற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, தாங்கள் வசிக்கும் பகுதியில் ஓட்டல் தொழில் தொடங்கும் நோக்கத்துடன் அனந்தபுரம் நகருக்குக் குடியேறியுள்ளது. அப்போது அவர்களுக்கு மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் அந்தக் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய மகாலட்சுமி, அவர்களின் நலிந்த பொருளாதார நிலையையும், வறுமையையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
“உங்களுக்கு ஓட்டல் தொழிலில் பெரிய லாபம் கிடைக்காது; எளிதில் கோடீஸ்வரன் ஆக என்னிடம் ஒரு வழி இருக்கிறது” என்று கூறி அவர்களின் ஆசையைத் தூண்டியுள்ளார். மேலும், “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், உங்கள் வீட்டில் அளவற்ற செல்வமும் செழிப்பும் கொழிக்கும்” என்றும் மூளைச்சலவை செய்துள்ளார். ஆரம்பத்தில் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், மகாலட்சுமியின் தொடர்ச்சியான வற்புறுத்தலாலும், வறுமையின் பிடியிலிருந்த தப்ப வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் இறுதியில் அதற்குச் சம்மதித்துள்ளனர்.
நம்பிக்கையின் பெயரால் ஏமாற்றப்பட்ட அந்தப் பெற்றோர், தங்களது இளம் சிறுமியை அந்தப் பூஜைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஹேமந்த் என்ற போலி மந்திரவாதி வரவழைக்கப்பட்டு, சிறுமியைத் தனி இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமியின் ஆடைகள் முழுமையாக அகற்றப்பட்டு, போலி மந்திரவாதி ஹேமந்த் கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளான். முதல் பூஜை முடிந்து பலனளிக்கவில்லை என்று கூறி, பெற்றோரை மீண்டும் மீண்டும் சம்மதிக்க வைத்துப் பல மாதங்களாகத் தொடர் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 8 அன்று, ஹேமந்த், அவனது மகன் பாலசுப்ரமணியம் மற்றும் விஜய் குமார் ஆகியோர் மீண்டும் வந்து பூஜை செய்துள்ளனர். அடுத்த நாளே (ஆகஸ்ட் 9) சிறுமியையும் அவரது தாயாரையும் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வெங்கடேஷ் யாதவ் என்ற மற்றொரு ஆசாமி முன்பும் அதே போன்ற வழிபாடுகள் என்ற பெயரில் சிறுமி சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பின்னர், தாயும் மகளும் பாக்கியலட்சுமி என்பவரது வீட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 11 அன்று, மீண்டும் அந்தச் சிறுமியை வழிபாடு என்ற பெயரில் எங்கேோ அழைத்துச் செல்ல முயன்றபோது, நீண்ட நாட்களாக அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்து வந்த கிராம மக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த குற்றவாளிகள், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் சிறுமியையும் அவரது தாயாரையும் வழியில் இறக்கிவிட்டுத் தப்பியோடினர். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, பின்னர் வழக்கு அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்தக் கோரச் செயலில் ஈடுபட்ட மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்ஸோ சட்டம் மற்றும் பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மூடநம்பிக்கையின் பெயரால் ஒரு பிஞ்சுப் பிள்ளையின் வாழ்வோடு விளையாடிய இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
