சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 24 குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதாகக் கூறி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்த வீடியோவில் அந்தப் பெண் தனக்கு 16 மகன்களும், 8 மகள்களும் இருப்பதாகக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மக்கள் தொகை பெருக்கம் குறித்த விவாதங்களில் மத ரீதியான இரட்டை நிலைப்பாடுகள் இருப்பதாகக் கூறி இந்த வீடியோ தீவிரமாகப் பகிரப்பட்டது. ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோ முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட ஒரு நகைச்சுவைக் காணொளி ஆகும்.
அந்த வீடியோவில் நடித்துள்ள பெண் பெயர் குஷ்பு பதக். அவரிடம் ஊடகங்கள் நடத்திய நேரடி விசாரணையில், தமக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார். ‘பாரத் பிரைம்’ ன்ற யூடியூப் சேனலில் வெளியான இந்த வீடியோவின் இறுதியில், இது பொழுதுபோக்குக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது என்றும், 24 குழந்தைகள் என்ற கூற்றை தங்களால் உறுதிப்படுத்த முடியாது என்றும் திரையில் மறுப்பு வாசகம் இடம்பெற்றிருந்தது. அந்தச் சேனலின் ஆசிரியர் விஜேந்திர சிங்கும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த குஷ்பு பதக் என்பவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. தங்களது சொந்தக் குடும்ப நகைச்சுவையாக அவர் உறவினர்களிடம் கூறி வந்த “எனக்கு 24 குழந்தைகள் உள்ளன” என்ற ஜோக்கை, சமூக வலைதளங்களில் பணம் ஈட்டும் நோக்கில் ஒரு காமெடி உள்ளடக்கமாக மாற்றியுள்ளார். நடிப்பு மற்றும் பாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் அவர் இதுபோன்ற நகைச்சுவை வீடியோக்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
