சமூக வலைதளமான எக்ஸ் நேற்று உலகம் முழுவதும் மூன்று முறை முடங்கிய நிலையில் இன்றும் பல இடங்களில் எக்ஸ் தளத்தை பயனர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தை ஹேக் செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்தார். அதோடு இதற்குப் பின்னணியில் உக்ரைன் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது தன்னுடைய ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவையை உக்ரைன் நாட்டில் நிறுத்தினால் மொத்த நாடும் முடங்கிவிடும் என்று மஸ்க் ஜெலன்ஸ்கியை எச்சரித்து இருந்தார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் உக்ரைன் போரை நிறுத்த மறுப்பு தெரிவிக்கிறது. இதன் காரணமாகத்தான் உக்ரைன் நாட்டை மஸ்க்  எச்சரித்தார். இதன் எதிரொலியாகத்தான் எக்ஸ் தளத்தை அவர்கள் ஹேக் செய்து முடக்கிவிட்டனர் என்று மஸ்க் பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக எலான் மஸ்க் உக்ரைன் தான் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்கரைன் நாட்டை தான் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.