சீனா, உலகின் மிக வேகமான குவாண்டம் கணினியை உருவாக்கி, கணினி உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Zuchongzhi-3 என்ற குவாண்டம் கணினி, Google’s Sycamore கணினியை விட 10 லட்சம் மடங்கு அதிக வேகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (USTC) இந்த கணினியை உருவாக்கியுள்ளது. குவாண்டம் கணினிகள், பாரம்பரிய கணினிகளைவிட மிக வேகமாக பெரிய கணக்கீடுகளை செய்து முடிக்கும் திறன் கொண்டவை. இந்த கணினி, குறிப்பாக Random Circuit Sampling (RCS) என்ற முறை மூலம் தகவல்களை மிகவும் அதிவேகமாக கணக்கீடு செய்யும் என Physical Review Letters ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் தனது Sycamore கணினியை 2019ல் அறிமுகப்படுத்தியது. அது ஒரு குறிப்பிட்ட கணக்கீட்டு பணியை 200 விநாடிகளில் முடித்தது, இதே வேலை பாரம்பரிய சூப்பர் கணினியில் செய்ய 10,000 ஆண்டுகள் ஆகும். ஆனால், சீனாவின் Zuchongzhi-3 இந்த கணக்கீட்டினை 10 லட்சம் மடங்கு அதிக வேகத்தில் முடிக்கக்கூடியதாக இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த புதிய கணினி 105 qubits மற்றும் 182 couplers கொண்டதாக உள்ளது. இது, Google’s Sycamore கணினியை விட மேலும் மேம்பட்டதாகும்.

குவாண்டம் கணினிகள் பாரம்பரிய கணினிகளை விட வேறுபட்ட முறையில் செயல்படும். இதில் Quantum Mechanics என்ற இயற்பியல் விதிகளை பயன்படுத்தி கணக்கீடுகள் செய்யப்படுகின்றன. இதனால், மிகப்பெரிய தகவல்களை ஒரு கணத்தில் கணக்கிடும் திறன் கிடைக்கிறது. இதன் மூலம், கடினமான விஞ்ஞான மற்றும் மருத்துவ ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மிக வேகமாக முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய கணினி தவறின்றி (fault-tolerant) செயல்படும் பொது பயன்பாட்டு குவாண்டம் கணினியை உருவாக்கும் முயற்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கும் என USTC விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது கணினி தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணுவியல், உயிரியல் மற்றும் மருந்து தயாரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்த கணினியின் பயன்பாடு மிக முக்கியமானதாக இருக்கும். சீனாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு, உலக நாடுகளின் கணினி வளர்ச்சியில் புதிய போட்டியை உருவாக்கியிருக்கிறது.