நாமக்கல்-திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரி ஒன்றின் பின்னால் வந்த மினி சரக்கு வாகனம், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுழன்றது.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மீது சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியதில், அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரக்கு வாகன ஓட்டுநர், சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து நாமக்கல் நகர காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.