சேலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி செல்வகணபதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “எடப்பாடி பழனிசாமி துரோகத்தின் மொத்த உருவம்” என்று சாடிய அவர், அதிமுகவின் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முன்பு ஒரு காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தான் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காக, யாரிடமும் உதவி கேட்கத் தயங்காத எடப்பாடி, செங்கோட்டையன் வீட்டு வாசலில் பல மணி நேரம் காத்திருந்த காலமெல்லாம் உண்டு என்று அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், இன்று அதிகாரம் கைக்கு வந்தவுடன், அதே செங்கோட்டையனையே கட்சியில் இருந்து ஓரங்கட்டிவிட்டதாகச் சாடினார்.
மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தன்னைத் தொடர்புகொண்ட செங்கோட்டையன், மிகுந்த மனவேதனையுடன் “மாப்ள, என்னையும் குத்திட்டான்யா (எடப்பாடி)” என்று புலம்பியதாகச் செல்வகணபதி மேடையிலேயே போட்டு உடைத்தார். ஒரு காலத்தில் ஈபிஎஸ்-க்கு பக்கபலமாக இருந்த செங்கோட்டையனே இப்படிப் புலம்பும் அளவுக்கு அதிமுகவில் நிலைமை மோசமாகிவிட்டது என்பதைச் செல்வகணபதியின் இந்தப் பேச்சு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
