தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறோம். கூட்டணி மற்றும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசுவதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.

அதுவரை நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கூட்டணி பற்றிப் பேசக்கூடாது” என்று அறிவுறுத்தினார். மேலும், “ஆட்சியில் பங்கு இல்லை என்று திமுக எங்களிடம் இதுவரை அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை. பேச்சுவார்த்தையின் போது எங்கள் நிலப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைப்போம்” என்றும் அவர் கூறினார்.