ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் என்ற பெயருடைய லங்கூர் குரங்கு, மாதம் 12,000 ரூபாய் சம்பளத்தில் அதிகாரப்பூர்வமாக வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கல்லூரியில் சாதாரண குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்ததால், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

மேலும் சாதாரண குரங்குகள் லங்கூர் குரங்குகளைக் கண்டு அஞ்சுவதால், அவற்றை விரட்டுவதற்காகவே கோலுவை கல்லூரி நிர்வாகம் “பாதுகாவலராக” நியமித்துள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை லங்கூர் கோலு தனது பணியைச் செய்கிறது. இதற்காக அதைக் கவனித்துக் கொள்ளும் நபருக்கு மாதம் 12,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதனால் இதர மனித ஊழியர்களைப் போலவே கோலுவும் தனது ஷிப்ட் நேரத்தில் கல்லூரி வளாகத்தைச் சுற்றி வந்து, மற்ற குரங்குகள் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொள்கிறது. லங்கூர் குரங்கின் வருகைக்குப் பிறகு கல்லூரி வளாகத்தில் குரங்குகளின் தொல்லை கணிசமாகக் குறைந்துள்ளதால், இந்த வினோதமான “வேலைவாய்ப்பு” சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.