ரயில் பயணத்தின் போது பாதுகாப்பு விதிகளை முற்றிலும் மீறி, ஏசி பெட்டிக்குள் பயணி ஒருவர் அகல் விளக்கு மற்றும் ஊதுபத்திகளை ஏற்றி பூஜை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் மேல் படுக்கையில் அமர்ந்துகொண்டு பனியனுடன் சம்மணமிட்டு அமர்ந்துள்ள அந்த நபர், தனது முன்பாக எரியும் விளக்கை வைத்துக்கொண்டு சாதாரணமாக வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். அருகில் உள்ள சக பயணிகள் எந்தளவுக்கு ஆபத்து என்பதைப் புரியவைத்து எச்சரித்தும், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர் தனது வழிபாட்டைத் தொடர்ந்துள்ள காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ரயிலின் ஏசி பெட்டிகள் போன்ற மூடப்பட்ட இடங்களில் இதுபோன்று தீயை மூட்டுவது மிகப்பெரிய தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இது சக பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ரயிலில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி புகை அலாரங்களை இந்த ஊதுபத்தி மற்றும் விளக்கின் புகை உடனடியாகத் தூண்டிவிட்டு பெரும் பீதியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று சக பயணிகள் எச்சரித்துள்ளனர். எனினும், அந்த நபர் யாருடைய பேச்சையும் கேட்காமல் தனது செயலில் தீவிரமாக இருந்ததைக் கண்ட பலரும், இது உண்மையான பக்தியா அல்லது சமூக வலைதளங்களில் வைரலாகும் விளம்பர வெறியா என்று கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் காட்டுத் தீயாய் பரவியது. இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலரின் இது போன்ற முட்டாள்தனமான மற்றும் பொறுப்பற்ற செயலால் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பயணிகளின் உயிர் பலியாகும் அபாயம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாகச் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்தச் சம்பவம் எந்த ரயிலில் எப்போது நடைபெற்றது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போதைக்கு உடனடியாக வெளியாகவில்லை என்றாலும், இந்திய ரயில்வே துறையின் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ள இந்தச் செயல் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் பயணங்களில் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து தண்டிப்பது அவசியமானது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்காக உயிரைப் பణயம் வைக்கும் இதுபோன்ற போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு முன்பாக ரயிலில் முதலிரவு அறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது போன்ற வீடியோ மற்றும் ஹோமம் வளர்த்தது போன்ற பூஜை வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.