பெங்களூருவில் பிரபல கட்டுமான நிறுவனமான ‘கான்ஃபிடன்ட் குரூப்’ தலைவர் சி.ஜே.ராய் (57), இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இந்தச் சோதனையின் போது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், மன உளைச்சலில் இருந்த அவர் இன்று காலை தனது பங்களாவில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சி.ஜே.ராய், தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் அதிபராகத் திகழ்ந்தவர்.

இவர் தொழிலதிபர் என்பது மட்டுமின்றி, மலையாளத் திரையுலகிலும் மிகவும் பிரபலமானவர். நடிகர் மோகன்லால் நடித்த ‘காஸனோவா’ போன்ற பிரம்மாண்ட படங்களைத் தயாரித்தவர் என்பதோடு, மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரராகவும் இருந்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய தொழிலதிபர் உயிரை மாய்த்துக் கொண்டது ஒட்டுமொத்த வர்த்தக உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.