ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் திருமணமான ஒரு பெண் மீது ஏற்பட்ட வன்கொடுமை சம்பவம் தற்போது மாநிலமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலம் கழிக்க வெளியே சென்ற அந்த பெண்ணை புலேரோ காரில் வந்த ஏழு பேர் கடத்தி, ஓடும் காரிலேயே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர், அந்த பெண்ணை 11 நாட்கள் பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூர செயலை குற்றவாளிகள் வீடியோவாக எடுத்துப் பின்னர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிரட்டியதாகவும், அவரை சாலையோரத்தில் மயக்கநிலையிலே வீசிவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்துக்கு பின் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையம் சென்று புகார் அளிக்க முயன்றபோதும், போலீசார் அதை ஏற்க மறுத்ததாகவும், அவரை அங்கிருந்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், நீதிமன்றத்தை நாடிய அவரது குடும்பத்தினரின் முயற்சிக்குப் பிறகே, ஜூன் 2 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது அதிகரிக்கும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது நீதிக்காக காவல்துறையை சுற்றி வருகிறார். இந்த சம்பவம், பெண்ணினம் மீதான கொடூரத்தை மட்டும் அல்லாமல், நீதியை தேடும் ஒரு பெண்ணுக்கே எதிரான அலட்சியத்தையும் வெளிக்கொணர்கிறது. சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இது போன்ற சம்பவங்களில் போலீசாரின் தாமதமான நடவடிக்கைகள் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது போலீசிடம் உள்ள நிலையில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.