கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சியின் அமைப்பை மறுசீரமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, அவருடன் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்ட நம்பிக்கைக்குரிய நண்பர்களையும், ரசிகர் மன்றத் தலைவர்களையும் 2ஆம் கட்ட தலைவர்களாக நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை முக்கிய நிர்வாகிகளான N. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் எவரையும் நேரடியாகச் சேர்க்காமல், அனைத்து கட்சித் தீர்மானங்களையும் விஜய் தானே தனிப்பட்ட முறையில் கையாள்ந்து வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நேரடியாக வீடியோ கால் மூலம் உரையாட விஜய் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் “இதை முன்பே செய்திருந்தால் கட்சிக்கு இத்தனை பெரிய அவப்பெயர் ஏற்பட்டிருக்காது” என வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், “இனியாவது கட்சி கட்டமைப்பை உறுதியாக அமைத்து, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சி செய்ய வேண்டும்” எனவும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜயின் இந்த புதிய முடிவு, தவெக கட்சியில் புதிய ஒற்றுமையையும் நம்பிக்கையையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
