ராஜஸ்தானின் மாவட்டத்தில் உயிருடன் இருந்த இளைஞரை மருத்துவர் ஒருவர் இறந்துவிட்டதாக அறிவித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த நவம்பர் 21, 2024 அன்று, ஒரு காப்பகத்திலிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞரை, அங்கிருந்த மருத்துவர்கள் சோதிக்காமலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

பின்னர் மருத்துவர் நவ்நீத் மீல் என்பவர் உடலைப் பரிசோதிக்காமலேயே போலி உடற்கூறாய்வு அறிக்கையைத் தயார் செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தார். மயானத்தில் இறுதிச் சடங்கிற்காக உடல் வைக்கப்பட்டிருந்தபோது, திடீரென அந்த இளைஞரின் உடலில் அசைவு ஏற்பட்டதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர் மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை ஆரம்பத்தில் எவரும் குற்றவாளிகள் இல்லை என அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால், இந்த அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்தது. மறுவிசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மருத்துவர் நவ்நீத் மீல் உடலைப் பரிசோதிக்காமலேயே மரணச் சான்றிதழ் வழங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தீவிரமான குற்றமாக கருதிய நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ஒரு மனிதரின் உயிரோடும் கண்ணியத்தோடும் விளையாடும் இத்தகைய செயல் சமூக ஒழுக்கத்திற்கு எதிரானது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.