திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள முத்தாபுதுப்பேட்டை கரிமேடு அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் தான் சரண்ராஜ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷீலா ராணி என்ற மனைவியும், சர்வேஷ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் இருக்கின்றனர்.

கணவர்-மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென சரண்ராஜிக்கு ஷீலா ராணியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால் ஷீலா ராணி கோபித்துக்கொண்டு தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் தம்பதியினரின் இரு பிள்ளைகளும் அவரது தங்கை வீட்டிற்கு சென்று விட்டனர்.

இதையடுத்து சரண்ராஜ் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சரண்ராஜ் மனைவி ஷீலா ராணியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து பதட்டத்தில் இருந்த சரண்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய ஷீலா ராணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இறந்து கிடந்த சரண்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.