பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் பகுதியைச் சேர்ந்த சுனிதா என்ற பெண், கடந்த 2012-ஆம் ஆண்டு லல்லன் பாஸ்வான் என்பவரைத் திருமணம் செய்தார்.
திருமணமான மூன்று ஆண்டுகளில் சுனிதா திடீரென மாயமான நிலையில், அவரது தந்தை வக்கீல் பாஸ்வான் தனது மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக் கொடுமை செய்து சுனிதாவைக் கொலை செய்து உடலை மறைத்துவிட்டதாக 2015-இல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் பயந்துபோன கணவர் லல்லன் பாஸ்வான், கடந்த 11 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சுனிதா திடீரென மீனாபூர் காவல் நிலையத்தில் முன்னிலையானது போலீசாரை அதிரவைத்துள்ளது.
போலீஸ் விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக 2015-ஆம் ஆண்டே வீட்டை விட்டு வெளியேறிய சுனிதா, டெல்லிக்குச் சென்று அங்குத் தனது காதலனை மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது. தனது வெளியேற்றம் கணவர் மீது கொலைப் பழியைச் சுமத்தும் என்று தான் நினைக்கவில்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
11 ஆண்டுகளாகக் கொலைக் குற்றச்சாட்டைச் சுமந்து கொண்டு தலைமறைவாக இருந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சுனிதாவின் வருகை மிகப்பெரிய சட்ட நிவாரணத்தை அளித்துள்ளது. சுனிதாவின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ள போலீசார், வழக்கை முடித்து வைப்பதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
