சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற 21 வயது இளம்பெண்ணான அமுல்யா ரத்தன், பொது இடத்தில் காணொளி பதிவு செய்தபோது ஏற்பட்ட மோதல் குறித்துப் பகிர்ந்த தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், அமுல்யா தன்னைத் தானே படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் நபர் ஒருவர் கடந்து சென்றதைக் கண்டு அதிருப்தியடைந்த அவர், பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை தெரியாமல் மக்கள் இருப்பதாகக் கடுமையாக விமர்சித்தார்.

 

“மற்றவர்கள் காணொளி எடுத்துக் கொண்டிருக்கும்போது குறுக்கே செல்வது நாகரீகமற்ற செயல்” என்றும், அவ்வாறு சென்ற நபர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

இந்தப் பதிவு எக்ஸ் தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொது இடங்கள் ஒன்றும் செல்வாக்கு மிக்கவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல என்றும், அங்கு நடமாடும் பொதுமக்களிடம் மன்னிப்பு எதிர்பார்ப்பது அதிகாரத் தோரணை என்றும் நெட்டிசன்கள் பலரும் அமுல்யாவைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.