பெங்களூருவில், கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிள் எச்.ஆர். சோனார் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பாம்பே சலீம் என அழைக்கப்படும் சலீம் ஷேக், ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதிப்புமிக்க பொருட்களை மீட்கும் நடவடிக்கையின் போது போலீசாருடன் பெங்களூருக்கு வெளியே உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, சோனாரும் மற்றொரு கான்ஸ்டபிளும் ஷாப்பிங் செல்லும் போது சலீமை ஹோட்டல் அறையில் பூட்டிவிட்டு சென்றனர். இதன் பின்னர், சலீம் அறையில் கிடந்த சோனாரின் சீருடையை அணிந்து, தனது மனைவிக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு செய்தது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த அதிர்ச்சி சம்பவம் நீண்டநாள் வெளிப்படாமல் இருந்த நிலையில், மே 2025இல் இந்திராநகரில் நடந்த மற்றொரு கொள்ளை வழக்கில் சலீம் கைது செய்யப்பட்டபோது அவரது மொபைல் போனில் போலீஸ் சீருடை அணிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ அழைப்பின் ஸ்கிரீன்ஷாட்கள் கைப்பற்றப்பட்டன. புகைப்படங்களில் சோனாரின் பெயர் பேட்ஜ் தெளிவாக இருந்ததால், அலட்சியம் உறுதியானது.
இந்திராநகர் துணை காவல் ஆணையர் பி.தேவராஜ், சலீம் காவலில் இருந்தபோது சீருடை அணிந்தது சோனாரின் அலட்சியத்தால் ஏற்பட்டது எனவும், இது காவல்துறையின் விதிமுறைக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்திராநகர் இன்ஸ்பெக்டர் சுதர்சன் அளித்த அறிக்கையின் பேரில், காவல்துறை தலைவர் சோனாரை கடமை தவறியதற்காக இடைநீக்கம் செய்தார். மேலும், சோனாருக்கும் சலீமுக்கும் இடையிலான தொடர்புகள், மற்றும் பிற அதிகாரிகள் குற்றவாளிக்கு உதவியிருக்கிறார்களா என்பதையும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சலீம் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால், அவரது புகைப்படங்கள், கைரேகைகள் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே போலீசாரிடம் உள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
