உத்தரபிரதேசம் ஷாஜகான்பூரில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளாக திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ள தம்பதியில், மனைவி அக்கம்பக்க கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதலில் ஈடுபட்டது கணவனுக்கு தெரியவந்தது. பலமுறை எச்சரித்தும் பயனின்றி, இறுதியில் கணவன், உறவினர்கள் முன்னிலையில் மனைவியை அவளது காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளார்.
நிகோஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ், பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபியை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு ரூபி, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த கௌஷல் என்ற இளைஞருடன் தொடர்பு கொண்டார்.
ஒருநாள் மனோஜ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவியையும் கௌஷலையும் விரும்பத்தகாத நிலையில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனோஜ் மாமியாரையும் உறவினர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
முதலில் மாமியார் எதிர்ப்பு தெரிவித்தாலும், ரூபி தனது காதலனுடன் தான் வாழ வேண்டும் என்ற வலியுறுத்தலில் உறுதியுடன் இருந்தார். இறுதியில், கணவன்–மனைவி இருவரும் உறவினர்கள் முன்னிலையில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், இன்று முதல் தம்பதியினர் உறவு இல்லை என்றும், ரூபி கௌஷலைத் திருமணம் செய்து அவனுடன் வாழ்வாள் என்றும் பதிவு செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நகலை போலீசாரிடம் சமர்ப்பித்தனர்.

இதற்குப் பிறகு, மனோஜ் தனது மனைவியை அவளது காதலனுடன் திருமணம் செய்து அனுப்பிவிட்டார். இரு குழந்தைகளையும் மாமியாரின் வீட்டில் ஒப்படைத்து, அவர் தனியாக வீடு திரும்பியுள்ளார். “இது பரஸ்பர சம்மதத்தின் பேரில் நடந்ததால், எந்த தரப்பிலும் புகார் இல்லை” என்று நிகோஹி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விசித்திரமான சம்பவம் தற்போது அந்தப் பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
