கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்கத் தடை விதித்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் புறாக்கள் அதிகளவில் கூடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அவற்றின் எச்சங்களால் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் பொது இடங்களில் புறாக்களுக்குத் தானியங்களைத் தூவுவது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே புறாக்களுக்கு உணவளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அங்கேயும் புறாக்கள் அளவுக்கு அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது தொற்று நோய்களைப் பரப்ப முயலுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.