இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் கழுவி மீண்டும் பயன்படுத்தப்படுவதாக வெளிப்பட்டுள்ளது. இதை வெளிச்சமிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, ரயில்வே நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சத்னாவைச் சேர்ந்த பயணி ரவி திவேதி, கட்னியிலிருந்து சத்னாவுக்குச் செல்லும் 16601 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தபோது இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் முன்பதிவு இல்லாமல் பேன்ட்ரி காரின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, பேன்ட்ரி ஊழியர் ஒருவர் குப்பைத் தொட்டியில் இருந்து பயன்படுத்திய தட்டுகள் மற்றும் பெட்டிகளை எடுத்து, வாஷ்பேசினில் கழுவுவதை கவனித்ததாக தெரிவித்துள்ளார்.
அதைப் பற்றி ரவி கேள்வி எழுப்பியபோது, அந்த ஊழியர் “இந்த ஒருமுறை பயன்படுத்தும் பொருட்கள் பாதி விலைக்கு திருப்பித் தரப்படுகின்றன, அதனால் அவை கழுவி மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன” என்று வெளிப்படையாகக் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர், தன்னை வீடியோ பதிவு செய்கிறார்கள் என்பதை உணர்ந்த ஊழியர், ரவியை மிரட்டி வீடியோ எடுக்க வேண்டாம் என எச்சரித்தார்.
ट्रेन में खाना बुक करने से पहले देख लीजिए वीडियो…
वीडियो अमृत भारत एक्सप्रेस (16601) से आया है#IndianRailway pic.twitter.com/SP26hjVIbC
— NDTV India (@ndtvindia) October 18, 2025
பின்னர் ரவி, அந்த வீடியோவை தனது நண்பரும் சமூக செயற்பாட்டாளருமான பங்கஜ் சுக்லாவுக்கு அனுப்பினார். பங்கஜ் அதை தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டு, ரயில்வே அமைச்சகத்தை டேக் செய்தார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் பங்கஜை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து முழு விவரங்களையும் கேட்டுள்ளது. பங்கஜ் கூறுகையில், “புகார் பதிவு செய்த பிறகு, ரவியை பேன்ட்ரி கார் ஒப்பந்ததாரர் தொடர்பு கொண்டு, புகாரை வாபஸ் பெற ரூ.25,000 வழங்க முன்வந்தார். ஆனால் ரவி அதை நிராகரித்தார்” எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் ரயில்வே கேட்டரிங் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பயணிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
